புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய மேற்படிப்புக்கு க்யூட் பிஜி அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் (பொறுப்பு) தரணிக்கரசு இன்று வெளியிட்டார். மொத்தமுள்ள 66 படிப்புகளுக்கான 3,413 இடங்களுக்கு 31,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை பட்டப் மேற்படிப்பு, முதுநிலை பட்டய மேற்படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டிருந்தது. பிஜி மற்றும் பிஜி டிப்ளமோ படிப்புகளுக்கு க்யூட்- பிஜி 2024 (CUET(PG) – 2024) தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.
அதன்படி க்யூட் பிஜி-2024 மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை துணைவேந்தர் (பொறுப்பு) தரணிக்கரசு இன்று வெளியிட்டார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 66 முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன. இதில் மொத்தம் 3,413 இடங்கள் உள்ளன. இதற்கு மொத்தம் 31,500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தனித்தனியாக பாடவாரியாக தரவரிசைப்பட்டியல் பல்கலைக்கழக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. க்யூட் பிஜி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் துறைவாரியாக தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் பல்கலைக்கழக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உரிய நேரத்தில் சேர்க்கை செயல்முறை தொடங்கவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.