பழையகோட்டைப்புதூர் நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படுமா? - 5 ஆண்டுகளாக காத்திருப்பு


பழையகோட்டைபுதூர் ஊராட்சியில் பள்ளியை தரம் உயர்த்த வலியுறுத்தி நடைபெற்ற கிராமசபைக் கூட்டம்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பழையகோட்டைப்புதூர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென பெற்றோரும், மாணவர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பழையகோட்டைப்புதூர் பள்ளி பெற்றோர்கள் கூறியதாவது: காங்கயம் வட்டம் பழையகோட்டை கிராமத்தில் பழையகோட்டை புதூர் நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு வெங்கரையாம் பாளையம், நல்லம்மாள்புரம், சேமலைவலசு, குட்டப்பாளையம், இச்சிக்காட்டுவலசு, பாரதிபுரம், மேலப்பாளையம் உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசின் 3 தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளியும் உள்ளன. இதில் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

பழையகோட்டைப்புதூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தற்போது 170 குழந்தைகள் படிக்கின்றனர். பழைய கோட்டை கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லாததால், பழையகோட்டைப்புதூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பை முடிக்கும் குழந்தைகள், 9-ம் வகுப்பு படிக்க 8 கி.மீ. தொலைவில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், பள்ளி நேரத்தில் அரசு பேருந்து வசதியும் இல்லாததால், பெரும்பாலான குழந்தைகள் மிதிவண்டியில் செல்ல வேண்டியுள்ளது.

மழைக்காலங்களிலும், வெப்பம் அதிகரித்துள்ள கோடை காலத்திலும் 8 கி.மீ. தூரம் மிதிவண்டியில் சென்று வருவதால், குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால், பல குழந்தைகள் பள்ளி படிப்பை இடைநிற்கும் சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

சாந்தாம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியும், நத்தக்காடையூரில் அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. சாந்தாம்பாளையத்துக்கு பேருந்து வசதி முழுமையாக இல்லை. நத்தக்காடையூருக்கு உரிய நேரத்தில் பேருந்துகள் இல்லை.

இதனால் பெண் குழந்தைகள் உட்பட அனைவரும் மிதிவண்டியில்தான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு, உடல் சோர்வுற்றால்கூட பள்ளிக்கு சென்று அழைத்து வரும் நிலைதான் உள்ளது.

குழந்தைகளின் நலன் கருதி 2019 - 20-ம் கல்வி ஆண்டில் பழையகோட்டைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு முறையாக விண்ணப்பம் அனுப்பப்பட்டது. பள்ளியை தரம் உயர்த்துவதற்கான பொதுமக்கள் பங்களிப்புத் தொகையாக ரூ.ஒரு லட்சம், கிராம மக்கள் மூலமாக அரசின் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

மேலும், பழையகோட்டை கிராமசபைக் கூட்டங்களில் 3 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி கல்வி துறைக்கு அனுப்பியுள்ளோம். ஆனால், நடப்பு கல்வி ஆண்டு வரை உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்துவதற்கு கல்வி துறையின் அனுமதி கிடைக்காமல் உள்ளது.

தற்போது முன்னாள் மாணவர் அமைப்பு மூலமாகவும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி நலன் கருதி, நடப்பு கல்வியாண்டில் பழையகோட்டைப்புதூர் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறனர்.

x