புத்தக மூட்டை சுமந்த குழந்தைகளை தோளில் சுமந்த பெற்றோர்


குழந்தைகளை சுமந்துவரும் த.வா.கட்சியினர்

குழந்தைகள் புத்தக மூட்டைகளையோ, பெற்றோர்கள் குழந்தைகளையோ தூக்கிவருவது புதிதல்ல. ஆனால், புத்தகப் பையை குழந்தைகள் முதுகில் தூக்கிக்கொள்ள, அந்தக் குழந்தைகளை பெற்றோர்கள் தோளில் தூக்கிவைத்துக் கொண்டு வந்து மனு கொடுத்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான கல்விக் கட்டண விஷயத்தில் தனியார் பள்ளிகள் காட்டிவரும் அடாவடித்தனத்தை கல்வித் துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்பதற்காக, இந்த வித்தியாசமான முறையை கையிலெடுத்திருக்கிறது புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

குழந்தைகளை சுமந்துவரும் பெற்றோர்கள்

இன்று (08.09.2021) காலை, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலரின் அலுவலகத்துக்கு 4 குழந்தைகளை தோளில் தூக்கிவைத்துக் கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வந்தனர். கல்விக் கட்டண விஷயத்தை வலியுறுத்தி மாவட்ட கல்வி அலுவலரிடம் குழந்தைகள் கையாலேயே மனு அளித்தனர். மனு கொடுத்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் நியாஸ் அகமதுவிடம் காமதேனு இணையதளத்துக்காக பேசியதிலிருந்து:

’’பள்ளிகள் திறக்கப்பட்டு இன்னும் 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பள்ளிக் கட்டணத்தை கட்டச்சொல்லி தனியார் பள்ளிகள் பெற்றோரை வாட்டி வதைத்து வருகின்றன. கடந்த ஒன்றரை வருடங்களுக்குமான முழுத் தொகையையும் கட்டுங்கள் அல்லது அதில் பாதி தொகையையாவது இப்போது கட்டுங்கள் என்று பள்ளிகள் நெருக்கடி கொடுப்பதால், பெற்றோர்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். சரி, அந்தப் பள்ளி வேண்டாம் அரசுப் பள்ளிக்கே போகலாம் என்றாலும் சான்றிதழ் தர மறுக்கிறார்கள். கட்டண பாக்கியை கட்டிவிட்டு சான்றிதழை வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, கரோனா எனும் பெரும் தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வந்த காலச் சூழ்நிலையில் பல தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லாமலும், புத்தகம் வாங்காமலும் பள்ளி கட்டணத்தை மட்டும் செலுத்தச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? பணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் தருவேன் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

நியாஸ் அகமது

ஆகையால், தனியார் பள்ளிகளுக்கு அரசு அறிவித்துள்ள பள்ளிக் கட்டணத்தை மட்டுமே அப்பள்ளிகள் வசூலிப்பதை அரசு கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும். கட்டாயக் கட்டணம் வசூலிக்கும் அனைத்து தனியார் பள்ளிகளிலும், கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் விதமாக உடனே அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அரசு உடனடியாக அக்கறை காட்ட வேண்டும்” என்கிறார்.

இவரது கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது; ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அது அரசின் கைகளில்தானே இருக்கிறது.

தனியார் பள்ளியில் இருந்து வெளியேறி அரசுப் பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் தேவையா?

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 1- 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் சேர மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை.

மாற்றுச் சான்றிதழைப் பொருத்தவரை 9 முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களின் நிலை?

9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கட்டாயம் வேண்டும். அதேநேரம், வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதபட்சத்தில் மாற்றுச் சான்றிதழ் அளிக்க எந்தப் பள்ளியும் மறுக்கக் கூடாது என்று நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

x