மாநில நல்லாசிரியர் விருது பெற்றிருக்கும் நடிகை மனோரமாவின் தம்பி மகள், அந்த விருதைத் தனது அத்தை மனோரமாவுக்கு அர்ப்பணிப்பதாக அன்பு பொங்கச் சொல்கிறார்.
சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியர் விருது, இந்த ஆண்டு மொத்தம் 385 ஆசியர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர், திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள வல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜோதி. இவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நட்பையும் அபிமானத்தையும் பெற்ற நடிகை மனோரமாவின், சொந்த தம்பியான பக்கிரிசாமி என்பவரின் மகள் ஆவார்.
தனது அத்தை மனோரமாவை ஒருமுறை வல்லூர் பள்ளிக்கு அழைத்துவந்து, ஆண்டு விழாவில் கலந்துகொள்ளச் செய்திருக்கிறார். இவர் குறவர் இன மக்கள் நிறைந்த பகுதியான திருமேனி தொடக்கப் பள்ளி உட்பட, தான் பணியாற்றிய பள்ளிகள் அனைத்திலும் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் கல்வி நலன் ஆகியவற்றில் அக்கறை செலுத்தியவராகப் போற்றப்படுகிறார். அதனால் மக்களாலும், அரசு அதிகாரிகளாலும் பாராட்டுகளைப் பெற்றவர். அதன் பலனாக தற்போது நல்லாசிரியர் விருதும் கிடைத்துள்ளது.
மாநில நல்லாசிரியருக்கான இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஜோதி, "மனோரமா அத்தை எங்க மேல ரொம்ப அன்பா இருப்பாங்க. எவ்வளவு பிசியா இருந்தாலும் அடிக்கடி ஊருக்கு வந்து எங்கள பார்த்துட்டுப் போவாங்க. நானும் என் தங்கை சாந்தியும் ஆசிரியர்கள் ஆனதில் அவங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. நான் நடிச்சுக் கொடுக்குறேன், நீங்க படிச்சுக் கொடுக்குறீங்க. புள்ளைங்கள முன்னேத்துற இடத்துல இருக்கீங்க. நல்லா வேலைபார்த்து நல்ல மாணவர்களை உருவாக்கனும், பசங்க மனசுலயும். ஊர் மக்களோட மனசுலயும் இடம் பிடிக்கனும்னு அறிவுரை சொல்வாங்க.
நான் இந்த விருது வாங்குறத பார்த்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாங்க. ஆனா இப்ப அதப் பார்க்கிறதுக்கு அவங்க இல்லேங்கிற வருத்தம் ரொம்பவே இருக்கு. எங்களுக்கு எப்பவுமே ஆதரவா இருந்த என் அத்தை மனோரமாவுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்” என்று சொல்லி கண்கலங்கினார்.