கல்லூரிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை!


மாணவர் போராட்டம்

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் 1,553 கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் 1,096 கல்லூரிகளும் இருக்கின்றன. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தபடி, பொறியியல் படிப்புகளைவிட கலை அறிவியல் கல்லூரிகளில்தான் மாணவர்கள் மிக ஆர்வமாகச் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இருப்பதோ, வெறும் 887 கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமே. அதிலும் 108 கல்லூரிகள்தான் அரசுக் கல்லூரிகள். 139 கல்லூரிகள் அரசு உதவி பெறுபவை. மற்ற அனைத்தும் (640) சுயநிதிக் கல்லூரிகள். அதாவது அரசுக் கல்லூரிகளைவிட 6 மடங்கு அதிகமாக சுயநிதிக் கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன.

ஏழை மாணவர்களுக்கு இடம் இல்லை

மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசதியான வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்க முடியும் எனும் நிலை இருக்கிறது. இதே நிலைதான் சுயநிதிக் கல்லூரிகளிலும். ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்கான ஒரே வழி அரசுக் கல்லூரியும், அரசு உதவி பெறும் கல்லூரிகளும்தான். பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் ஒரு சில பட்டப்படிப்புகள் மட்டுமே இருக்கின்றன. அங்கும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், கவுரவ விரிவுரையாளர்களை வைத்தே காலம் கடத்தும் நிலையே நீடிக்கிறது. ஓரளவுக்குத் தரமான கல்வி பயில வேண்டும் என்றால் அந்த மாணவர்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகளையே நாடுகிறார்கள். ஆனால், அந்தக் கல்லூரிகளோ மாணவர்களையே பிடித்து விழுங்குகிற அளவுக்கு லாப வெறிப் பசியில் இருப்பதுதான் சோகம்.

சமீபத்தில் நடந்த மாணவர் சேர்க்கையின்போது, ஒவ்வொரு அரசு உதவி பெறும் கல்லூரியும் இஷ்டத்துக்குக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டதாகச் சொல்கிறார் அகில இந்திய மாணவர் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் காளீஸ்வரன்.

காளீஸ்வரன்

“மதுரை புறநகரில் உள்ள ஒரு கல்லூரியில், அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு அதிகக் கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, பி.ஏ, பி.காம் போன்ற கலைப்பிரிவுப் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு 319 ரூபாய் மட்டுமே கல்விக்கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், அவர்களோ 3,500 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதாவது ஆண்டுக்கு வெறும் 636 ரூபாய்க்குப் பதில் 7,000 ரூபாய் வசூலிக்கிறார்கள். இதேபோல அறிவியல் படிப்புகளுக்கு வருடத்துக்கு 900 ரூபாய் வாங்குவதற்குப் பதில் 9,000 ரூபாய் வாங்குகிறார்கள். இதைக் கண்டித்துக் கல்விக் கட்டணம் கட்ட மறுத்துப் போராட்டம் நடத்தினோம். அரசு அறிவித்த கட்டணத்தையே வசூலிக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும்" என்றார் காளீஸ்வரன்.

என்ன ஆயிற்று இலவசம்?

மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் (மூட்டா) முன்னாள் தலைவரான பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் கூறுகையில், “தமிழ்நாட்டில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் அனைத்தும் இலவசம் என்று 16 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி அறிவித்தார். ஆனால், இன்னமும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதெல்லாம் பல்கலைக்கழகக் கட்டணம், நூலகக் கட்டணம்தான் என்று சொன்னாலும்கூட, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.காம் படிப்புக்கு அதிகபட்சம் 900 ரூபாயும், பிஎஸ்சி பாடப்பிரிவுகளுக்கு 2,000 ரூபாயும்தான் வரும். ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் 25 ஆயிரம், 30 ஆயிரம் என்று கட்டணம் வசூலிக்கின்றன. சில கல்லூரிகள் சத்தமில்லாமல் கட்டணக் கொள்ளையடிக்கின்றன என்றால், சிறுபான்மையினர் கல்லூரிகளோ தங்களது இணையதளத்திலேயே கட்டணம் 25 ஆயிரம், 30 ஆயிரம் என்று தைரியமாகப் போட்டிருக்கின்றன. இப்படி எந்தெந்தக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிற முழு விவரத்தையும் குறிப்பிட்டு, முதல்வருக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளேன். இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவும் அதில் வலியுறுத்தியிருக்கிறேன்" என்றார்.

கிருஷ்ணசுவாமி

"எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் கல்வி வியாபாரப் பொருளாகிவிட்டது. அரசியல்வாதிகளே கல்லூரிகள் நடத்த ஆரம்பித்ததால், கல்விக் கட்டணக் கொள்ளையை கேட்க ஆளில்லாமல் போனது. நன்றாக இயங்கிக்கொண்டிருந்த அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அதைப் பார்த்து கட்டணக் கொள்ளையில் இறங்கின. இப்போது கரோனாவைக் காரணம் காட்டி, இழந்த பணத்தை ஈடுகட்டுவதற்காக இன்னும் அதிகமாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்” என்கிறார் உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிருஷ்ணசுவாமி.

தொடர்ந்து பேசிய கிருஷ்ணசுவாமி, “இது எல்லாம் ஆட்சியாளர்களுக்குத் தெரியும். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. அரசே இதுதொடர்பாக தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அதில் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்களுக்கும் இடம் தர வேண்டும். கல்விக் கட்டணக் கொள்ளையைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணவும் அந்தக் கமிட்டி உதவும். சாதாரண கடலை மிட்டாய் வாங்கினால்கூட, ‘கஸ்டமர் கேர்’ தொடர்பு எண் தருகிறார்கள். கல்வி வியாபாரமாகிவிட்ட சூழலில், அது நியாயமான விலையில், தரமாகக் கிடைக்காவிட்டால் அதுகுறித்துப் புகார் கொடுக்கிற உரிமையையாவது மாணவர்களுக்குத் தர வேண்டும். இதற்கென சுயாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை ஏற்படுத்தி அதைத் தொடர்புகொள்வதற்கான முகவரி, மின்னஞ்சல், வாட்ஸ்-அப் எண் போன்றவற்றை விளம்பரப்படுத்த வேண்டும்" என்றார்.

முரளி

கல்லூரி முதல்வர்கள் மனதுவைக்க வேண்டும்

இந்தக் கட்டணக் கொள்ளைகளுக்கு எதிராக நீதிமன்றப் படியேறி வழக்கு நடத்திவரும் பேராசிரியர் முரளியிடம் கேட்டபோது, “கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வற்புறுத்தினாலும் கல்லூரி முதல்வர்கள் நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்குரிய அதிகாரங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. நான் மதுரைக் கல்லூரி முதல்வராக இருந்தபோது 5 ஆண்டுகள் அப்படி கட்டண உயர்வை அமல்படுத்தாமல் இருந்தேன். ஆனால், இன்று அரசியல்வாதிகளோடு எப்படி கல்லூரி நிர்வாகங்கள் இணைந்து செயல்படுகின்றனவோ, அதைப் போலவே கல்லூரி நிர்வாகங்களின் முறைகேடுகளுக்குக் கல்லூரி முதல்வர்களும் ஆசிரியர்களும் துணைபோகிறார்கள். ஒரு மாணவன் கட்டணம் அதிகமிருக்கிறது என்று கூறி கட்டணம் செலுத்த மறுத்தால், அவனைவிட 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுத்து அந்த சீட்டைப் பெற மற்ற மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தயங்குவதே இல்லை. தங்கள் உரிமைகளுக்காகவும், பிரச்சினைகளுக்காகவும் போராடும் எண்ணமும் மாணவர்களிடையே குறைந்திருக்கிறது. அவர்களுக்குத் தோள் கொடுக்கிற ஆசிரியர்களும் குறைந்துவிட்டார்கள்” என்றார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருப்பதால், இதுதொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், இதெல்லாம் அவருக்குத் தெரியாமல்தான் நடக்கிறது என்று சொல்லவும் முடியவில்லை.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியாவது இதுபோன்ற குறைகளைக் களையுமா திமுக அரசு?

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

x