இனி எல்லாமே ‘அரசுப் பள்ளி’ என்றழைக்கப்பட வேண்டும்!


பள்ளிக் கல்வி அமைச்சருடன் சதீஷ்குமார்

‘தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துவகைப் பள்ளிகளையும் இனி, அரசுப் பள்ளிகள் என்னும் ஒரே பெயரிலேயே அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ’கல்வியாளர்கள் சங்கமம்’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர் சதிஷ்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அமைப்பின் சார்பில், தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு காலத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்தும் ஊராட்சி ஒன்றியங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனால் அவை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் என்றும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் என்றும் இருந்தன. ஆனால், அவை அனைத்தும் தற்போது அரசின் பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து பல்லாண்டுகள் கடந்து விட்டன.

ஆனால், இன்றளவும் அவை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அவை தவிர கள்ளர் சீர்த்திருத்தப் பள்ளிகள், ஆதிதிராவிட நலத் துறை பள்ளிகள் என ஜாதியின் பெயராலும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

சதீஷ்குமார்

அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் என்பதைப் போல, இந்தப் பள்ளிகளும் அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள் என அழைக்கப்படுவதே சரியானதாகவும், பெருமைக்குரியதாகவும் இருக்கும். எனவே, அவற்றை அரசின் பெயராலேயே அழைக்கப்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மாற்றங்களைத் தந்து கொண்டிருக்கும் தங்களது ஆளுகையில் ஆதிதிராவிடப் பள்ளிகள், கள்ளர் நலப்பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளும், இனி ‘அரசுப் பள்ளிகள்’ என்ற பொதுப்பெயரிலேயே அழைக்கப்படும் என்கிற ஒரு சிறந்த அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அரசு அறிவிக்கும் என்று நம்புகிறோம் என்று கல்வியாளர்கள் சங்கமம் கேட்டுக் கொண்டுள்ளது.

x