குமரியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமா?


தமிழகத்தில் விவசாயத்தையே பெரும்பான்மையாக நம்பியிருக்கும் மாவட்டங்களில் முதன்மையானது கன்னியாகுமரி. இங்கு இதுவரை வேளாண்மைக் கல்லூரிகள் இல்லை. அரசு கல்லூரி மட்டுமல்லாது, விவசாய படிப்புக்கென தனியார் கல்லூரிகளும் இல்லாத நிலை தொடர்கிறது. அதிக அளவில் விவசாயம் நடக்கும் குமரி மாவட்டத்தில் அரசு சார்பில் வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தை ‘நாஞ்சில் நாடு’ என்னும் அடைமொழியிலும் அழைப்பார்கள். நாஞ்சில் என்ற சொல்லுக்கு கலப்பை என்று அர்த்தம். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் இருப்பது போல், ஒருகாலத்தில் கேரளத்தின் நெற்களஞ்சியமாக நாஞ்சில் நாடே இருந்தது. இங்கு மிக அதிக பரப்பளவில் விவசாயம் நடந்துவருகிறது. அதிலும் குமரி மாவட்டத்தில் நெல், வாழை, தென்னை, மரவள்ளிக் கிழங்கு, சேனை, மலைப் பயிர்களான கிராம்பு, முந்திரி என பலவகையான பயிர் சாகுபடியும் நடக்கிறது. அதுமட்டும் இல்லாமல் பணப்பயிரான ரப்பர் சாகுபடியும் இங்கு அதிக பரப்பளவில் நடக்கிறது.

இந்த அளவுக்கு விவசாய செழிப்பான குமரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி இல்லாதது பெருங்குறையாக உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குமரி மாவட்டத்தில் ஒரு அரசு வேளாண் கல்லூரி அமையும்போது, இங்குள்ள விவசாயிகளுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். அங்கிருக்கும் பேராசிரியர்களிடமும் விவசாயிகள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறமுடியும். அந்தவகையில் புதிதாக மலர்ந்திருக்கும் திமுக அரசு, குமரியில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்னும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது. செவிசாய்க்குமா அரசு?

x