3 நிமிடத்தில் 50 குறள்கள்


எல்.எம்.சிவதர்ஷினி கோவை ஆட்சியரிடம் பாராட்டுப் பெறுதல்

1330 குறளையும் அடிபிறழாமல் சொல்லுவது, அதையே தலைகீழாக மாற்றி சொல்லுவது, இடது கையால் அத்தனை குறள்களையும் எழுதிக்காட்டுவது, குறள்களுக்கு ஏற்ப ஓவியங்கள் தீட்டி கண்காட்சிப் படுத்துவது என திருக்குறளில் எத்தனை பரிமாண சாதனைகள் உண்டோ, அத்தனையையும் நம் இளைய தலைமுறையினர் நிகழ்த்தி கைதட்டல் பெற்று வருவது தொடர்ந்து நடக்கிறது.

அந்த வகையில், கோவை கவுண்டம்பாளையம் பி.என்.டி காலனி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி எல்.எம். சிவதர்ஷிணி இணையதளம் வழியாக மூன்றே நிமிடத்தில் 50 திருக்குறளை ஒப்புவித்துள்ளார்.

‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு தொடர்ந்து நடத்தி வரும் போட்டியில் இது புதிய சாதனை. அதற்காக அந்த அமைப்பு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் தந்து மாணவி சிவதர்ஷினியைப் பாராட்டியுள்ளது. தான் பெற்ற தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை பெற்றோருடன் வந்து கோவை ஆட்சியர் சமீரானிடம் கொடுத்து ஆசிபெற்றார் மாணவி.

தன் சாதனை குறித்து மாணவி கூறும்போது, ‘‘சின்ன வயசிலிருந்தே திருக்குறள் மீது எனக்கு அபாரப்பற்று. இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே திருக்குறளை தொடர்ந்து மனப்பாடம் செய்து ஒப்புவித்து வருவேன். அப்படி கிடைத்த பயிற்சிதான் இவ்வளவு வேகமாக திருக்குறளை ஒப்புவித்து இந்த பரிசைப் பெறக் காரணம். இதற்கு என் பெற்றோரும், ஆசிரியரும் கொடுத்த ஊக்கமும், உற்சாகமுமே காரணம்!’ என தெரிவித்தார்.

x