பெருமாள் கரட்டில் ஒரு நடுகல்...


ஆனைமலை நடுகல்

போரில் வீர மரணம் அடைந்தவரின் நினைவாக, அவரது வீரத்தை போற்றும் விதத்தில் நடுகல் எடுக்கப்பட்டு, அக்கல்லில் வீரனின் வீரக்கதையை சிற்பமாக செதுக்கி வைத்து வழிபடுவது பண்டைய மரபு. அப்படிப்பட்டபுராதானமிக்க நடுகல் ஒன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை திகம்பரேஷ்வரர் கோவில், பெத்த நாச்சியார் அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள புதரில் மிகப்பெரிய நடுகல் ஒன்று புதருக்குள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நடுகற்களில் சம்பந்தப்பட்ட வீரன் ஒருவனது உருவம் மட்டுமே பொறிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான நடுகற்கள் நம் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழகமெங்கும் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனைமலையில் புதருக்குள் கிடக்கும் இந்த நடுகல்லில் சற்றே வித்தியாசமாக இரண்டு வீரர்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் சிற்பம் செதுக்கப்பட்டு காணப்படுகிறது. இடது ஓரம் இருக்கும் வீரன் தனது இடது கையில் ரம்பம் போன்ற வாளை உயர்த்திப் பிடித்துள்ளது போன்றும், வலது கைப்பகுதி சற்று உடைந்தும் தெரிகிறது. அடுத்ததாக உள்ள மற்றொரு வீரன் வலதுகையில் உள்ள நீண்ட வாள் ஒன்றை தூக்கிப் பிடித்துள்ளவாறும், இடது கையில் ரம்பம் போன்ற வாளை வைத்துள்ளது போன்றும் உள்ளது. அதற்கு இடதுபுறம் ஒரு பெண் இடது கையில் மலர் ஒன்றை வைத்துள்ளார். வலது கையை தொங்கவிட்டவாறு நின்றிருக்கிறாள். வீரனக்கு அருகில் வலது புறம் ஒரு சிறுவன் வீரனுக்கு ஆதரவளிப்பது போன்றும். அருகில் ஒரு பெண் வலது கையில் மலர் ஒன்றை வைத்து, இடது கையை கீழே தொங்கவிட்டும், மற்றும் ஒரு பெண் வலதுகையை சாமரத்துடன் இடது கையை தொங்க விட்டவாறும் காணப்படுகிறாள்.

புதருக்குள் நடுகல் காட்சி

இந்த நடுகல்லை புதருக்குள் கண்டுபிடித்து அங்கேயே சுத்தப்படுத்தி வரலாற்றுப் பேராசிரியர் பி. கந்தசாமி. அவரிடம் பேசினோம், ‘கல்லூரியில் பணிபுரிந்து கொண்டே பல்வேறு வரலாற்று ஆய்வுகளும் செய்துள்ளேன். அதில் இதுவரை சத்தியமங்கலம், பவானி, ஆனைமலை, நீலகிரி மலைகள் என பலதரப்பட்ட பகுதிகளில் இதுவரை 252 நடுகற்களை கண்டுபிடித்து ஆய்வுக்குட்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளேன். அப்படி ஆனைமலையில் நிறைய நடுகற்கள் கிடைத்துள்ளன. இங்குள்ள பெருமாள்கரட்டில் பல இரும்புப் பொருட்கள் (திப்புவின் காலத்தியது), மற்றும் மூன்றடுக்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை கோவையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல்துறை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நடுகற்கள் கிடைப்பது அபூர்வத்திலும் அபூர்வம். பொதுவாக நடுகற்களில் ஒரு வீரர் அல்லது இரண்டு வீரர்கள் உருவம் மட்டுமே இருக்கும். இது இரண்டு வீரர்கள், மூன்று பெண்கள், ஒரு சிறுவன் என உருவம் பொறித்து காணப்படுகிறது. இரண்டு வீரர்கள் எதிரிகளுடன் மோதி வீரமரணம் அடைந்ததன் நினைவாகவும், அவர்கள் இறந்ததை அறிந்து அவனுடனே இரண்டு பெண்கள், அவர்களின் மகன் ஒருவன் இறந்ததன் நினைவாகவும், அவர்களை தேவலோகப் பணிப்பெண் வாழ்த்தி அழைத்துக் கொண்டு மேலோகத்திற்கு செல்வது போலவும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம் நூற்றாண்டு விஜயநகர அரசு காலத்தியது போல் தெரிகிறது. இதை ஆய்வுக்குட்படுத்தினால் இன்னும் பல சரித்திர விஷயங்கள் வெளிவரக்கூடும்’ என்றார்.

x