உடுமலை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் சூழலில், உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் திரண்டு வருவதும், எண்ணிக்கை அதிகரிப்பால் சேர்க்க முடியாமல் பள்ளி நிர்வாகம் திணறும் சூழல் ஏற்பட்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் சின்னவீரம்பட்டி கிராமம் உள்ளது. அங்கு கடந்த 1925-ம் ஆண்டில் தொடங்கப் பட்டது. அரசு தொடக்கப் பள்ளி, அதன் பின் நடுநிலைப் பள்ளியாக விரிவுப்படுத்தப்பட்டது. நடப்பாண்டு 100 ஆண்டு விழா கொண்டாட தயாராகி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு வரை இப்பள்ளியில் மாணவர் 160 என்ற எண்ணிக்கையில் தான் இருந்தது.
அதன்பின் பொறுப்பேற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளின் கடின உழைப்பாலும், முயற்சியாலும் தற்போது மாணவர் சேர்க்கை 700 என்ற எண்ணை தொட்டுள்ளது. தொடர்ந்து 10 கி.மீ., தொலைவில் இருந்து மாணவர்களை சேர்க்க பெற்றோர் திரண்டு வருகின்றனர். ஆனால் கூடுதல் மாணவர்களை சேர்க்க முடியாமல் பள்ளி நிர்வாகம் திணறி வருகிறது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நா. இன்பக் கனியிடம் கேட்டபோது, ”சுமார் 10 கி.மீ., சுற்றளவில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர். தரமான கல்வி, தூய்மையான பள்ளி வளாகம், கழிவறை வசதி, கணினி ஆய்வகம், ஹைடெக் லேப், வகுப்புக்கு 35 என்ற எண்ணிக்கையில் தமிழ், ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன. அரசு அனுமதியின் பேரில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகளும் இயங்குகின்றன.
1 முதல் 8ம் வகுப்பு வரை நடப்பாண்டு மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 660 ஆக உள்ளது. அரசு நியமனத்தின் மூலம் 12 ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 3 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்று கின்றனர். பெற்றோர், தன்னார்வலர்கள் உதவியால் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.25 லட்சம் பள்ளி மூலம் அரசு செலுத்தப்பட்டது. அதன் மூலம் ரூ.1.30 கோடி மதிப்பில் புதிதாக கூடுதல் வகுப்பறைகளை அரசு கட்டிக்கொடுத்துள்ளது. தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் படுகிறது’ என்றார்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் க.சோமசுந்தரம் கூறுகையில், பள்ளியில் போதிய இடவசதி இல்லை. விளையாட்டு பயிற்சி அளிக்க கூடுதல் இடம் தேவை. கூடுதல் வகுப்பறைகளும், அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கையும் இல்லை. அதனால் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை அரசு மட்டுமே கவனிக்க வேண்டும் என்று எண்ணாமல், முன்னாள் மாணவர்களும், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் இணைந்து செயல்பட்டால் இப்பள்ளியை போன்றே அனைத்து அரசு பள்ளிகளுக்கும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்’ என்றார்.
இப்பள்ளிக்கு எதிரே இளநீர் வியாபாரம் செய்த தாயம்மாள் தனது சேமிப்பு ரூ.1 லட்சத்தை பள்ளி வளர்ச்சிக்கு நன்கொடையாக அளித்தார்.அந்த தகவலை ”இந்து தமிழ் திசை” நாளிதழில் செய்தியாக வெளிக்கொண்டு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இளநீர் வியாபாரியின் செயலை பாராட்டி பேசினார். அது நாடு முழுவதும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.