சேலம்: தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் சிறப்பு முகாம் ஏற்காடு, கொல்லிமலை உள்பட தமிழகத்தில் 4 இடங்களில் நாளை (ஜூன் 3) தொடங்குகிறது.
தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கோடை கொண்டாட்டம் என்ற 5 நாள் சிறப்பு முகாம் ஏற்காடு, கொல்லிமலை, கொடை ரோடு- பழநி, குற்றாலம் என 4 இடங்களில் நாளை தொடங்குகிறது.
இது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: “பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் கோடை கொண்டாட்டம் சிறப்பு முகாமுக்கு, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளில் அவர்களின் கலைத் திறன், தனித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 900 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஏற்காட்டில் நடைபெறும் முகாமில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 225 பேர் பங்கேற்கின்றனர். இதில் மாணவ, மாணவிகளுக்கு கலைப்போட்டிகள், யோகா, விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை வரும் 7-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
ஏற்காடு தவிர, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு- பழநி, தென்காசி மாவட்டம் குற்றாலம் ஆகிய இடங்களிலும் இன்று முகாம் தொடங்குகிறது.
பிளஸ் 2 பயில உள்ள மாணவர்களுக்கு மன அழுத்தம் நீங்கி, உற்சாகத்துடன் அவர்கள் கல்வி பயிலும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்காட்டில் நடைபெறும் முகாம் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் இருந்து வரும் பொறுப்பாளர்களைக் கொண்டு, நடத்தப்படும். முகாம் ஏற்பாடுகள் அனைத்தும் எவ்வித கட்டணமுமின்றி, பள்ளிக் கல்வித்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.