சிவகங்கை: காளையார்கோவில் அருகே இளைஞர் கொலையில் பணி நீக்கப்பட்ட காவலர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, வலையம்பட்டியைச் சேர்ந்த ஜனா (22) குறுஞ்செய்தி அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்காக நெடுவத்தாவைச் சேர்ந்த ஆடு வியாபாரி வெங்கடேசன் மகன் சரத்குமார் (26), ஜனாவை அழைத்து கண்டித்ததோடு, தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மறவமங்கலம் இருப்பான்பூச்சி மதுக்கடை அருகே பேச்சுவா்த்தை நடத்த ஜனா தரப்பினர், சரத்குமாரை அழைத்துள்ளனர்.
இதையடுத்து சரத்குமார் மரக்காத்தூரைச் சேர்ந்த சிவசங்கரனுடன் (28) இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜனா, பணி நீக்கப்பட்ட காவலர் தவசுக்குடியைச் சேர்ந்த பிரபு (37), சேதம்பலைச் சேர்ந்த விக்ரம் (23), ஆண்டூரணியைச் சேர்ந்த சிவா (29) உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து சரத்குமாரை வாளால் வெட்டினர். தடுக்கச் சென்ற அவரது நண்பர் சிவசங்கரனை யும் வெட்டிவிட்டு தப்பினர். இதில் சரத்குமார் உயிரிழந்த நிலையில், காயமடைந்த சிவசங்கரனை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சரத்குமார் உடல் வைக்கப்பட்டது.
இது குறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி, உறவினர்கள் காளையார்கோவில் காவல் நிலையம் முன், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆஷிஷ் ராவத், டிஎஸ்பி அமல அட்வின் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேரத்துக்கு பின்னர் மறியலை கை விட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. இதனிடையே ஜனா, பிரபு, விக்ரம், சிவா ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் சரத்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சரத்குமாருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் மகாலெட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்தது.