திருப்பத்தூர் அருகே காணாமல் போன நர்சிங் மாணவி - விவசாய கிணற்றி்ல் உடல் மீட்பு


காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நர்சிங் மாணவி திருப்பத்தூர் அருகேயுள்ள விவசாய கிணற்றில் நேற்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த மிட்டூர் கல்லுக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீபிகா(19). இவர், திருப்பத்தூர் அருகேயுள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தீபிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், அவரது பெற்றோர் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி குறித்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, கல்லுக்குட்டை அருகே உள்ள விவசாயக் கிணற்றில் இளம்பெண் உடல் மிதப்பதாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், குரிசிலாப்பட்டு காவல் துறையினர் மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த பெண் உடலை மீட்டு விசாரணை நடத்தியபோது, அது காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தீபகா என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தீபிகா உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இது தொடர்பாக குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீபிகா தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டு உடல் கிணற்றில் வீசப்பட்டதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x