தாளவாடியில் பயங்கரம்... நள்ளிரவில் பாட்டி, பேரன் படுகொலை


ஈரோடு: தாளவாடியில் பாட்டி, பேரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகளும், ராகவன் (11) என்ற மகனும் உள்ளனர். ராகவன் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களது பாட்டி சிக்கம்மா (65), அருகில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பாட்டி வீட்டில் ராகவன் உறங்கியுள்ளார். நேற்று காலை ராகவன் வீட்டுக்கு வராத நிலையில், சிக்கம்மா வீட்டுக்கு மாதப்பா சென்றார். அப்போது, அங்கு சிக்கம்மா, ராகவன் ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி போலீஸார், இருவரது உடலையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று முன் தினம் நள்ளிரவு மழை பெய்து கொண்டு இருந்தபோது, வீட்டுக்கான மின்சாரத்தை துண்டித்து விட்டு உள்ளே நுழைந்தவர்கள் அரிவாளால் இருவரையும் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள தாளவாடி போலீஸார், முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா அல்லது பணம், நகைக்காக கொலை நடந்துள்ளதா என விசாரிக்கின்றனர்.

எஸ்பியிடம் பொதுமக்கள் புகார்: இதனிடையே, தாளவாடி வந்த ஈரோடு எஸ்பி சுஜாதா விசாரணை மேற்கொண்டார். அப்போது, ‘தாளவாடி, தொட்டகாஜனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கர்நாடக மாநில மது விற்பனை நடக்கிறது. மது அருந்தியவர்களால், அடிக்கடி குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எஸ்பியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். ‘கொலையாளிகள் விரைவாக பிடிக்கப்படுவர் எனவும், கர்நாடக மது விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுப்பதாகவும்’ எஸ்பி உறுதி அளித்தார்.

x