சிவகங்கை: காளையார்கோவில் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நெடுவதாவைச் சேர்ந்த ஆடு வியாபாரி வெங்கடேஷன் மகன் சரத்குமார் (26). இவரும் இவரது நண்பர் மரக்காத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவசங்கரன் (28) இருவரும் நேற்றிரவு மறவமங்களம் இருப்பன்பூச்சி மதுக்கடை அருகே இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி தனது வாகனத்தில் கொண்டு சென்று காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தார். ஆனால், அதற்குள் சரத்குமார் உயிரிழந்தார்.
சிவசங்கரனை மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து காளையார் கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காளையார் கோவில் அரசு மருத்துவமனை அருகே மதுரை- தொண்டி சாலையில் சரத்குமாரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.