சொத்தை பிரித்து தர மாட்டாயா? - கோவையில் தந்தையை கட்டி வைத்து அடித்த மகன்கள் கைது


கோவை: சொத்துக்காக தந்தையை கட்டி வைத்து அடித்த மகன்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த மெட்டுவாவியை சேர்ந்தவர் குப்புசாமி (70). இவரது மனைவி ருக்குமணி (65) இவர்களுக்கு சுப்பிரமணியம் (42) சிவக்குமார் (41) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. குப்புசாமிக்கு சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மூன்று குடும்பத்தினரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் செய்து கொடுக்கும்படி குப்புசாமியிடம் கேட்டுள்ளனர். அவர் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் சொத்தை பிரித்து தர வலியுறுத்தி தந்தையின் கை, கால்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இது குறித்து நெகமம் காவல் நிலையத்தில் குப்புசாமி அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ சுந்தர மூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். சிவக்குமார் மற்றும் சுப்பிரமணியை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

x