கரூர்: குளித்தலை அருகே நங்கவரத்தை அடுத்த நச்சலூர் மேல நந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (30). விவசாய கூலி. திருச்சி மாவட்டம் அதவத்தூரைச் சேர்ந்தவர் ராமாயி (25). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இருவரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து ராமாயியின் அண்ணன் ராம் பிரசாத்திடம் தேவராஜன் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிப்பதற்காக கட்டிடத் தொழிலாளியான ராம் பிரசாத் நந்தவனக் காட்டில் உள்ள ராமாயி வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார்.
அப்போது, தங்கையின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த ராம் பிரசாத், ராமாயியை தாக்கி, வேட்டியால் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். வீட்டுக்கு வந்த தேவராஜன் மனைவி உயிரிழந்து கிடப்பதை கண்டு, நங்கவரம் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த ராம் பிரசாத்தை (27), நங்கவரம் போலீஸார் கைது செய்தனர்.