சொகுசு வாழ்க்கைக்காக திருட்டு: சிங்கம்புணரி அருகே கைதான தம்பதியின் அதிர்ச்சி வாக்குமூலம்!


கைதான ராமு, லதாவுடன் போலீஸார்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே திருட்டு வழக்கில் தொடர்புடைய தம்பதியை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். சொகுசு வாழ்க்கைக்காக திருடியது தெரியவந்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டியைச் சேர்ந்த தம்பதி குணசேகரன்-ஜெயலெட்சுமி ஆகிய இருவரும் மார்ச் 27-ம் தேதி வீட்டைப் பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றனர். மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் தயாளன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கோட்டைவேங்கைபட்டி நான்குவழிச் சாலை சந்திப்பில் தனிப்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரையிலிருந்து சிங்கம்புணரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்ளிட்ட இருவர் போலீஸாரை பார்த்ததும் நிறுத்தாமல் சென்றனர்.

இதையடுத்து, அவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ராமு (31), அவரது மனைவி நாடாச்சி என்ற லதா (42) என்பது தெரியவந்தது. அவர்கள் சொகுசு வாழ்க்கைக்காக ஓசாரிபட்டியில் குணசேகரன் வீட்டில் நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 10 பவுன் நகைகள், சொசுகு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

x