சிவகங்கை: சிவகங்கையில் வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய ரூ.9,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
அந்தமான் யூனியன் பிரதேச தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கணேசன் (65). இவர் சிவகங்கை செந்தமிழ் நகரில் தனது மனைவி மல்லிகா பெயரில் வீடு வாங்கினார். பின்னர் வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய நகராட்சி பில் கலெக்டர் பாலமுருகனை (33) அணுகினார். அவர் ரூ.9,000 லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். போலீஸாரின் ஆலோசனையின்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று செந்தமிழ் நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து பாலமுருகனிடம் கணேசன் கொடுத்தார்.
மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சார்பு ஆய்வாளர் ராஜாமுகமது ஆகியோர் பாலமுருகனை கைது செய்தனர்.