பல்லடம் அருகே சோகம்: ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நோயாளி, மனைவி உயிரிழப்பு 


திருப்பூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வந்த நோயாளியும், உடன் வந்த அவரது மனைவியும் பல்லடம் அருகே விபத்தில் சிக்கி இன்று (ஏப். 11) உயிரிழந்தனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் கு.முருகன் (65). கயிறு உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு லாரியில் இருந்து கீழே விழுந்ததில் இடுப்பெலும்பு முறிந்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்வதற்காக நேற்று இரவு பட்டுக்கோட்டையில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸில் புறப்பட்டனர்.

ஆம்புலன்ஸில் மனைவி கல்யாணி (60), ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மதியழகன்(20) மற்றும் ஓட்டுநரின் நண்பர் விஜய் (20) ஆகியோர் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பெரும்பாளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று வந்தபோது, கரூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியை சாலையோரமாக நிறுத்தியிருந்தார். இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ், லாரி மீதி மோதியது.

இதில் அலறல் சத்தத்தை கேட்ட லாரி ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் ஆம்புலன்ஸில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கல்யாணி பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மதியழகன் மற்றும் விஜய் படுகாயம் அடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஓட்டுநர் மதியழகனின் 2 கால்களும் முறிந்து சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

x