பாம்பனில் வீடு புகுந்து நகை திருட்டு: வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது


ராமேஸ்வரம்: பாம்பனில் வீடு புகுந்து நகை திருடிய 2 வடமாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

டெல்லி நிஜாமுதீன் ரோதி காலனி பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (27), சாந்த் (28) ஆகிய இருவரும் ராமேசுவரத்தில் தங்கி பலூன் விற்று வருகின்றனர். நேற்று பாம்பன் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு விவேகானந்தர் நகரில் உள்ள ஒரு காலியிடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.

அப்போது, பாம்பன் விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்தன் மற்றும் இவரது மனைவி ராமலட்சுமி ஆகிய இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகே ஒளித்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

இதை கவனித்த ராகேஷ் மற்றும் சாந்த், அந்த சாவியை எடுத்து வசந்தன் வீட்டுக்குள் நுழைந்து 8 பவுன் நகை மற்றும் வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை திருடியுள்ளனர். பின்னர், வீட்டை விட்டு வெளியே வரும் போது, அப்பகுதி மக்களிடம் மாட்டிக்கொண்டனர். தகவலறிந்து வந்த பாம்பன் போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

x