வாணியம்பாடி: பள்ளி மாணவியின் ஆபாச புகைப்படத்தை அனுப்பக்கூறி மிரட்டி, அதனை நண்பர்களுக்கு பகிர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ரங்கன் வட்டம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (18). இவர், பூங்குளம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழகி வந்தார். மாணவியின் கைபேசி எண்ணை பெற்று அவரிடம் அவ்வப்போது பேசி வந்தார்.
இதில், மாணவியை ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்பச் சொல்லி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவி ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை கலையரசனுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை கலையரசன் தனது நண்பர்களுக்கும் அனுப்பி பகிர்ந்துள்ளார்.
இதனை அறிந்த மாணவி அதிர்ச்சியடைந்து கலையரசனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறி அழுதார். பின்னர், மாணவியின் தாயார் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் துறையினர் கலையரசன் மற்றும் அவரது நண்பர்களான ரஞ்சித், சந்தோஷ் மற்றும் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ரஞ்சித், கலையரசன், சந்தோஷ் ஆகிய 3 பேரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயதுள்ள 2 சிறுவர்களை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.