“என் கணவரை கொலை செய்த வனத்துறையினர்...” - யானை வேட்டை விவகாரத்தில் பெண் புகார்


தன் கணவரை கொலை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென, யானை வேட்டை விவகாரத்தில் சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் காப்புக்காடு பகுதியில் அண்மையில் தந்தத்துக்காக ஆண் யானை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் வனத்துறையால் கைதாகி பின்னர் தப்பியோடியதாகக் கூறப்பட்ட கொங்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் கடந்த 4-ம் தேதி ஏமனூர் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது மனைவி சித்ரா நேற்று வழக்கறிஞர் குழுவுடன் வந்து தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு 5 வயது மகள், இரண்டரை வயது மகன் உள்ள நிலையில் என் கணவர் செந்தில் வனப்பகுதியில் மர்மமாக உயிரிழந்துள்ளார். மேஸ்திரியான என் கணவர் கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி செங்கப்பாடி பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிலம் தொடர்பான விசாரணை என்ற பெயரில் வனத்துறையினர் என் கணவரை செல்போன் மூலம் அழைத்தனர். அதற்கு முன்பே என் மாமனாரும், கணவரின் சகோதரரும் விசாரணைக்காக பென்னாகரம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், என் கணவர் செந்தில் பென்னாகரம் வனத்துறை அலுவலகத்துக்கு சென்றார். யானையை சுட்டுக் கொன்றதாக அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் செந்தில் தப்பியோடியதாகக் கூறினர். அப்போதே என் கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தருமபுரி எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தேன். நான் பயந்தது போலவே தற்போது செந்தில் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வனத்துறையினரால் என் கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். என் கணவர் கொலைக்கு காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உரிய புலன் விசாரணை செய்து என் கணவர் கொலை தொடர்பாக எனக்கு நீதி வழங்க வேண்டும். என் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் தவிக்கிறேன். எனக்கும், எனது குழந்தைகள், என் கணவரின் பெற்றோர் வாழ்வாதாரத்துக்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

மனு அளிக்க வந்த குழுவில் இடம்பெற்றிருந்த, சமூக நீதிப் பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் மகாலிங்கம் கூறும்போது, ‘செந்தில் உடலை உள்ளூர் மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கூடாது. எங்களால் அடையாளம் காட்டப்படும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனையின்போது உடன் இருக்க வேண்டும். பிரேத பரிசோதனை நிகழ்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே செந்தில் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிப்போம்’ என்றார்.

x