ஆம்பூர் அடகுக் கடை உரிமையாளர் கொலை முயற்சி வழக்கு - தாய்மாமன் உட்பட 8 பேர் கைது


ஆம்பூர் அருகே சொத்து பிரச்சினையில் போலி சாமியார்கள் கூறியதை நம்பி அடகுக்கடை உரிமையாளரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற தாய்மாமன் உட்பட கூலிப்படையினர் 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (35). இவர், ஆம்பூர் நகைக்கடை பஜாரில் அடகுக்கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 26-ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது நண்பருடன் தனித்தனியே இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். ஆம்பூர் அடுத்த சோலூர் அருகே சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அருணை வழிமடக்கி அரிவாளால் வெட்டினர். அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே சற்று தொலைவில் முன்னால் சென்றுகொண்டிருந்த அருணின் நண்பர் திரும்பி வந்தார். அதற்குள், மர்ம நபர்கள் தப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும், தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் குமார் மேற்பார்வையில் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அருணை கொலை செய்ய முயன்றதாக வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி, (23) கோனாமேடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி (23) கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (27), சந்துரு (40), ஜெகன் (26) மற்றும் பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (65), வெங்கடேசன் (33) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இதில், முகமது அலி என்பவர் ஏற்கெனவே வாணியம்பாடியில் வசீம் அக்ரம் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என தெரியவந்தது. அவரை பிடிக்க முயன்றபோது கை முறிவு ஏற்பட்டதால் ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்ற 7 பேரையும் நேற்று அதிகாலை ஆம்பூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "அருணின் தாய்மாமன் பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய குமார். இவருக்கும், அருண் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக சொத்து தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. சொத்து பிரச்சினை தீர்க்க போலி சாமியார்கள் சொன்னதை நம்பி அமாவாசைக்குள் அருணை தீர்த்துக்கட்ட முடிவு செய்த விஜயகுமார், சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்துரு என்பவர் மூலமாக கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அருணை கொலை செய்ய ரூ.2 லட்சம் பேரம் பேசி முதற் கட்டமாக ரூ.60 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். கொலை செய்ய முயன்றதில் அருண் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பியதால் மறுநாள் ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சொத்து பிரச்சினை காரணமாக சொந்த தாய் மாமனே கூலி ஆட்களை வைத்து மைத்துனரை கொலை செய்ய முயற்சித்துள்ளார்’’ என்றனர்.

x