திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தற்காலிக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோ எதிரொலியாக முக்கிய பொறுப்பில் உள்ள ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பணி செய்யும் தற்காலிக பெண் ஊழியரிடம், முக்கிய பொறுப்பில் உள்ள ஊழியர் சதீஷ் (கோயில் உள்துறை மணியம்) என்பவர் இரட்டை அர்த்தங்களில் தவறாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, சதீஷ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் பரணிதரன் நேற்று முன் தினம் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியில் தவறாக பேசிய சதீஷ் மற்றும் அவருக்கு துணையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலில் பணி செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோயில் இணை ஆணையரை சந்தித்து மனு அளிக்க இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமையில் இந்து முன்னணியினர், கோயில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போதுஇ இணை ஆணையர் வெளியே சென்றிருப்பதாக கூறி, அவரது மனுவை அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இணை ஆணையரின் அறை முன்பு இந்து முன்னணியினர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகர காவல் துறையினர், கோயிலுக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், இரண்டு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பின் புகார் மனுவை உதவி ஆணையர் பால சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். பின்னர், இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு, கோயிலில் இருந்து நகர காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது, நகர காவல் நிலையத்தில் இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் என்பவர் மற்றொரு மனு அளித்துள்ளார். அம்மனுவில், “கோயிலில் பணி செய்யும் பெண்ணுக்கு அபிஷேக பிரிவில் பணியாற்றும் ஊழியர் சதீஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பான கைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது சதீஷ் என்பவருக்கு ஆதரவாக கோயிலில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் மற்றும் ஓட்டுநர் பணியில் உள்ளவர் செயல்பட்டுள்ளனர். தங்களுக்கு வேண்டியவர்க ளை முக்கிய இடங்களில் பணி வழங்குகின்றனர். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.