திருநெல்வேலி மாவட்டம் மானூர், மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன் ஆகியோரிடம் மதுரை மாவட்டம், தாசில்தார் நகர், ராயல் அவென்யூ பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி காளிஸ்வரி ஆகிய இருவரும் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.4.05 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் காளிதாஸ் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் படி மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டிலிருந்து பிரேம்குமாரும், காளிஸ்வரியும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் உத்தரவிட்டார்.
அதன்பேரில், குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமையிலான போலீஸார் பிரேம்குமார், அவரது மனைவி காளிஸ்வரியை தேடிவந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் கோவை மாவட்டம் வடவல்லி, ஸ்ரீராம் நகர், 3-வது அன்பகம் தெருவில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர்.