மீன்பாடி வண்டிகளை குறிவைத்து திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (61). சென்னை மின்ட் பகுதியில் தங்கி மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவர் கடந்த 2-ம் தேதி மூலக்கொத்தளம் பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு வந்த ஒருவர், பெரம்பூர் பகுதியில் பீரோ ஏற்ற வேண்டும் என அழைத்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டு, அந்த நபருடன் கலியபெருமாள் சென்றார்.
பெரம்பூர் படேல் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, கலியபெருமாளின் மீன்பாடி வண்டியையும், ரூ.4,000 பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் கலிய பெருமாள் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மீன்பாடி வண்டியை பறித்துச் சென்றது, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் அயூப் (37) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், செம்பியம், திருவிக நகர், அயனாவரம், ஓட்டேரி உள்ளிட்ட பல இடங்களில் மீன்பாடி வண்டிகளை திருடி கோயம்பேடு பகுதியில் விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து ஷேக் அயூப்பை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 12 மீன்பாடி வண்டிகளை பறிமுதல் செய்தனர்.