ஓசூர்: ஓசூரில் பணி ஓய்வு பெற உள்ள உதவியாளரின் கோப்புக்களை சமர்பிக்க சக ஊழியரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் பஸ்தி பகுதியில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் உதவியாளராக நாகராஜன் (60) பணி செய்து வருகிறார். இவர் வரும் 30-ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளார்.
ஓய்வுகால பணப்பலன்களுக்கான பட்டியல் தயார் செய்துகொடுக்க அதே அலுவலகத்தில் முத்திரை ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தருமபுரி மாவட்டம் மெனசியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (50), என்பவரிடம் முறையிட்டுள்ளார்.
இதற்கு தமிழ்செல்வன் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் அறிவுறுத்தலின்படி நேற்று ரசாயனம் தடவிய பணத்தை தமிழ்செல்வனிடம் வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், தமிழ்செல்வனை போலீஸார் கைது செய்தனர்.