அமெரிக்க பெண்ணுக்கு இ-மெயிலில் தொடர் பாலியல் தொல்லை: திருச்சி இளைஞர் கைது - அதிர்ச்சி தகவல்கள்


ஜேசு​பாலன் செல்​வ​நாயகம்

சென்னை: அமெரிக்கப் பெண்ணுக்கு இ-மெயில் மூலம் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த திருச்சி பட்டதாரி இளைஞரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஆன்லைன் மூலம் 2018-ம் ஆண்டுமுதல் தொடர்ந்து ஆபாசக் கடிதம் வந்துள்ளது. ஆரம்பத்தில் அந்த பெண் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

ஆனால், அத்துமீறல் அதிகரித்ததால் அந்த பெண், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பினார். அத்துடன் அவருக்கு ‘இ-மெயில்’, ‘எக்ஸ்’ சமூக வலைதளம் மூலம் அனுப்பப்பட்டிருந்த மிரட்டல் பதிவுகள், ஆபாச பதிவுகளையும் இணைத்திருந்தார்.

இதுபற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள `சைபர் க்ரைம்' போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக அமெரிக்கா பெண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்த ஆன்லைன்’ பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் அமெரிக்கா பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது திருச்சியைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் (37) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சைபர் க்ரைம் போலீஸார் திருச்சி சென்று அவரை நேற்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர். அவர் பயன்படுத்திய செல்போன், ஐபேட், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகத்துக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. எனவே, கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் கம்யூட்டர் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். பின்னர் ஜப்பான் நாட்டில் வேலை செய்வதற்காக ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் அதையும் பாதியிலேயே நின்றுள்ளார்.

இதையடுத்து, சமூக வலைதளம் மூலம் வெளிநாட்டினருடன் நட்பு பாராட்டி வேலை கிடைக்குமா? என்று கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அவ்வப்போது மிரட்டுவதையும் தனது வழக்கமாக வைத்திருந்துள்ளார். அப்படித்தான் தற்போது புகார் தெரிவித்த அமெரிக்கா பெண்ணையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதுவரையில் யாரும் புகார் அளிக்காததால் செல்வநாயகத்தின் மிரட்டல் போக்கு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இவர், திருச்சியில் இருந்தாலும் அமெரிக்காவில் வாழ்வது போன்று வாழ்ந்து வந்துள்ளார். அமெரிக்க நேரப்படி தன்னுடைய செயல்பாடுகளை மாற்றி அமைத்துள்ளார். இரவில் தூங்காமல் அன்னிய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஆன்லைன் மூலம் தொந்தரவு செய்வதை தனது பொழுதுபோக்காக வைத்திருந்துள்ளார்.

இவரது தந்தை, வேளாண்மைத் துறையில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்று கடந்த 2022-ம் ஆண்டு மரணமடைந்துள்ளார். வயதான தாயார் இருக்கிறார். கணவரின் ஓய்வூதியத் தொகையில் இருந்து வேலைக்கு செல்லாத மகன் செல்வநாயகத்தையும் கவனித்து வந்துள்ளார். விசாரணைக்கு பின்னர் செல்வநாயகம் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

x