4 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாணியம்பாடி தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை


திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சையத் லியாகத் அலி (52). கூலி தொழிலாளி. இவர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 7-10- 2022-ல் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை லியாகத் அலி கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சையத் லியாகத் அலியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், சையத் லியாகத் அலி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை கடத்திச் சென்றதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அந்த தொகையை அவர் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி மீனாகுமரி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

x