ராமநாதபுரம்: திருவாடானை அருகே பணி ஓய்வு பெறவிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவெற்றியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக இருந்தவர் ஜெ.செல்வநாதன். இவர் பயிர்க்கடன் வழங்கியதிலும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததிலும் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், விவசாயிகளும் கூட்டுறவுத் துறையில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதி பணி ஓய்வு பெறவிருந்த செயலாளர் செல்வநாதனை, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் ஜீனு பணியிடை நீக்கம் செய்து மார்ச் 28-ம் உத்தரவிட்டார்.