தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பட்டயக் கணக்காளரை மிரட்டி ரூ.1 கோடி பறித்ததாக காவல் ஆய்வாளர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே திருவிடைமரு தூர் வட்டத்துக்கு உட்பட்ட குலசேகரநல்லூரில் கொள்ளிடம் பாலம் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை அரசு கையகப் படுத்தி, தொடர்புடைய நில உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது. இதில், கும்பகோணம் ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் வி.ரவிச்சந்திரனின் 80 சென்ட் நிலமும் கையகப்படுத் தப்பட்டது.
அதன் பிறகு, அந்த நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை 2020ம் ஆண்டு ரவிச்சந்திரன் வெட்டி, வேறொரு இடத்துக்கு கொண்டுசென்ற போது, வருவாய்த் துறையினர் மறித்து, மரங்களை பறிமுதல் செய்தனர்.
அப்போது, பந்தநல்லூர் காவல் ஆய்வாளராக இருந்தவரான அரியலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சேர்ந்த நெப்போலியன் (45), ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு பேசி யுள்ளார். அப்போது அவர், மாவட்ட ஆட்சியர் தனது உறவினர் எனவும், அவரிடம் பேசி நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைப்பதாகவும் கூறி ரூ.1 கோடி பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகும் ரவிச்சந்திரனிடம் நெப்போலியன் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால் மனமுடைந்த ரவிச்சந்திரன், இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப் பிரிவுக்கு எஸ்.பி.ராஜாராம் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, நெப்போலியனை நேற்று இரவு கைது செய்தனர். இவர், தற்போது தருமபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.