ரூ.1 லட்சம் லஞ்சம்: அரக்கோணம் அருகே 3 மின்வாரிய பெண் ஊழியர்கள் கைது


ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றித்தர ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற மின்வாரிய பெண் ஊழியர்கள் 3 பேரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர் துரைசாமி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(44). இவர், தனது வீட்டின் மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றக்கோரி அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் மீது ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புனிதா, வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்ற வேண்டுமென்றால் தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வழங்க வேண்டும் என சரவணனிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ரூ.50 ஆயிரத்தை சரவணன், புனிதாவிடம் வழங்கினார்.

இருப்பினும், பாக்கித்தொகை ரூ.50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே வணிக மின் இணைப்பு வழங்கப்படும் என புனிதா திட்டவட்டமாக கூறினார். இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில், ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை சரவணனிடம் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் நேற்று வழங்கினர்.

அந்த பணத்தை எடுத்துக்கொண்டு விண்டர்பேட்டையில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்துக்கு சரவணன் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்றார். அப்போது, உதவி செயற் பொறியாளர் புனிதா சாப்பிட்டு கொண்டிருந்தார். சரவணனை கண்டதும், புனிதா பாக்கி தொகை உள்ளதா ? என கேட்டார். அதற்கு சரவணன் ரூ.50 ஆயிரத்தில் தற்போது ரூ.25 ஆயிரம் உள்ளது. பாக்கி தொகையை பிறகு தருகிறேன் என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட புனிதா தான் சாப்பிட்டு கொண்டிருப்பதால் ரூ.25 ஆயிரம் பணத்தை அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளர் மோனிகாவிடம் வழங்குமாறு கூறினார். அதன்படி சரவணன், மோனிகாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினார். அந்த பணத்தை மோனிகா அருகேயிருந்த ஆக்க முகவர் (போர்மேன்) புல்கீஸ் பேகத்திடம் வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கணேசன் தலைமையில், ஆய்வாளர்கள் விஜயலட்சுமி (ராணிப்பேட்டை), தமிழரசி (திருவள்ளுர்) மற்றும் காவலர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து லஞ்ச பணத்துடன் இருந்த மின்வாரிய ஊழியர்கள் புனிதா, புல்கீஸ்பேகம், மோனிகா ஆகிய 3 பேரை சுற்றிவளைத்தனர். பிறகு, அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, லஞ்சம் பெற்ற குற்றத்துக்கான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புனிதா, வணிக ஆய்வாளர் மோனிகா, போர்மேன் புல்கீஸ்பேகம் ஆகிய 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x