புதுச்சேரி: வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த கோபி என்பவரின் மகன் லோகேஷ் (16). இவர், பாண்டி மெரினாவில் இயங்கி வரும் படகு குழாமில் வேலை செய்து வந்தார். தனது நண்பர்கள் யுகேஷ், மணிகண்டன் ஆகியாருடன் லோகேஷ் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில், காமராஜர் சாலை வழியாக சென்றுள்ளார்.
சாரம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியுள்ள சேலத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவர் பைக்கில் வந்துள்ளார். காமராஜர் சாலை சிவகங்கை ஆப்டிகல்ஸ் எதிரே வந்தபோது பைக்கும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதியது.
இதில், ஸ்கூட்டரில் வந்த லோகேஷ், அவரது நண்பர்கள் மற்றும் பைக்கில் வந்த விஷ்வா ஆகியோர் காயமடைய, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லோகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புதுச்சேரி கிழக்கு பகுதி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.