ரூ.10 கோடி மதிப்பு சொத்துகளை தராததால் ஆத்திரம்: கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி, மகன் கைது


சேலம்: உடல் எடையை குறைக்கும் நிபுணரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, மகனை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் திருச்செங்கோடு சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). உடல் எடையை குறைக்கும் நிபுணராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராணி (53). இவர்களுக்கு அரவிந்த் (29) என்ற மகன் உள்ளார். இவர்களது மகளுக்கு திருமணமாகிவிட்டது.

ராஜேந்திரன் தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காணமாக கடந்த 25 ஆண்டுகளாக பிரி்ந்து வாழ்ந்து வந்தனர். ராஜேந்திரன் வாடகை வீட்டில் உடல் எடையை குறைக்கும் நிபுணராக தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி ராஜேந்திரன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சங்ககிரி ஆர்எஸ் கரிமேடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (31), கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (21) உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் ராஜேந்திரன் கொலை வழக்கில் அவரது மனைவி, மகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ராஜேந்திரனிடம் ஜீவனாம்சம் கோரி தொடர்ந்த வழக்கில் ராணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இததை எதிர்த்து ராஜேந்திரன் மேல் முறையீடு செய்திருந்தார். மேலும், ராஜேந்திரனுக்கு சொந்தமாக ரூ.10 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலம் உள்ளது. மகனுக்கு சொத்து தர மறுத்துள்ளார். இதனால், மனைவி, மகன் ஆகியோர் கூலிப்படையை ஏவி ராஜேந்திரனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராணி, அரவிந்த்தை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், என்றனர்.

x