மருதமலை கோயில் அடிவாரத்தில் தனியார் தியான மண்டபத்தில் வெள்ளி வேல் திருட்டு; தீவிர விசாரணை


கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் உள்ள தனியார் தியான மண்டபத்தில் வைத்து வழிபட்டுவந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி வேல் திருட்டு போனது.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஏப்.4) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருதமலை கோயில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்கிற பெயரில் தனியாருக்கு சொந்தமான ஒரு தியான மண்டபம் உள்ளது. அங்கு பக்தர்கள் முருகனை வேல் ரூபத்தில் வழிபட்டு வந்தனர். மூலவருக்கு முன்பாக சுமார் இரண்டரை அடியில் வெள்ளி வேல் வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சமாகும். நேற்றுமுன்தினம் இரவு சாமியார் வேடத்தில் வந்த நபர் வெள்ளி வேலை திருடிச் சென்றார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை கொண்டு வடவள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணை ஆணையர் விளக்கம்: இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை கோவை மண்டல இணை இணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் ஏப்.2-ம் தேதி இரவு 11.45 மணி அளவில் 3.100 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது. இது தனியாருக்கு சொந்தமான தியான மண்டபமாகும்.

இதன் நிர்வாகியாக குருநாத சுவாமி இருந்து வருகிறார். தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே வைக்கப்பட்டு தியானம் செய்யப்பட்டு வந்தது. இது இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தியான மண்டபம் அல்ல. இந்த சம்பவம் மருதமலை கோயிலில் நடைபெறவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

x