திருச்சி: உறையூரில் பாமக நிர்வாகி பேக்கரியில் ஒரு லட்சம் மதிப்பு பணம், பொருட்கள் கொள்ளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர்.கே.வினோத். திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவராக உள்ளார். இவர், திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில் வினோத் மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டு திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொருள்கள் கொள்ளை போயிருந்தன. இதுகுறித்து வினோத் கொடுத்த புகாரின்பேரில், உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுச் செய்து பழைய குற்றவாளிகளின் பட்டியலை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கேக் திருடிய கொள்ளையன்: இதற்கிடையே, பேக்கரியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிகாலை 2.30 மணியளவில் கடைக்குள் புகுந்த கொள்ளையன், தலையை மூடியப்படி இருக்கும் 'ஹூடி' டிஷர்ட்டும், அதற்குள்ளாக தலையில் ஹெல்மெட்டும் அணிந்திருக்கிறார். கையில் டார்ச் லைட் உதவியுடன் அங்குலம் அங்குலமாக கடையை நோட்டமிட்டு, பணம் மற்றும் பொருள்களை கொள்ளையடிக்கிறார். பின்னர் சாவகாசமாக அங்கிருந்து கிளம்புகிறார்.
சுமார், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சில்லரை காசுகள், ஷோகேசில் இருந்த கேக்குகள், பிஸ்கட்டுகளையும் கொள்ளையன் விட்டு வைக்காமல் அள்ளிச் சென்றுள்ளார். அதையடுத்து, பேக்கரியில் இருந்த கைரேகைகள், தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்படாமல் திறக்கப்பட்டுள்ளது. எனவே, வடமாநில கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.