தூத்துக்குடி: எட்டயபுரம் அரசு பாரதியார் நூற்றாண்டு நினைவு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளிடம் தவறாக நடந்த விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கார்மென்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவி, தனக்கு மெக்கானிக்கல் பிரிவு விரிவுரையாளர் மதன்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பேபி லதா மற்றும் கல்லூரி விசாகா கமிட்டியினர் விசாரணை நடத்தினர்.
மேலும், ஆட்சியரின் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கல்லூரிக்கு வந்து விசாரணை மேற்கொண் டனர். இதை தொடர்ந்து, விரிவுரையாளர் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்பிரச்சினையில் நியாயமான விசாரணை நடத்தி வலியுறுத்தி நேற்று காலை மாணவிகள் கல்லூரி வளாகத்த்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு, விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன், எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளான விரிவுரையாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில் தலைமையில் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பூமயில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எட்டயபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை, அதே கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து கல்லூரி நிர்வாகம் 2 நாட்களாக விசாரித்துக் கொண்டுள்ளது.
தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையீட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும். மாணவிக்கும், அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டியில் உள்ள 3 ஆசிரியர்கள் பாலியல் ரீதியான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, எதையும் மூடிமறைக்காமல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
மாதர் சங்கத்தினர் போராட்டம் எதிரொலியாக பாலிடெக்னிக் கல்லூரியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.