பெரம்பலூர்: அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்(40). திமுகவில் ஆலத்தூர் ஒன்றிய பொறுப்பில் உள்ளார். இவர் கறுப்பு நிற கார் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது காரின் பதிவெண் கொண்ட, அதே பிராண்ட், அதே நிறம் கொண்ட மற்றொரு கார் செஞ்சேரி சாலையில் செல்வதை இளஞ்செழியன் நேற்று கண்டார். இதையடுத்து, இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் அந்த காரை துரத்திச் சென்று மடக்கினார். காரின் முன்புறம் பாஜக பட்டியல் அணி மாநிலச் செயலாளர் என பெயர்ப் பலகை இருந்தது.
காரை ஓட்டிச் சென்றவரிடம் விசாரித்த போது, பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்ச முத்து (51) என்பதும், பாஜகவில் பட்டியல் அணி மாநிலச் செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. முன்னதாக, காரை மடக்கிப் பிடித்ததால் பிச்சமுத்து ஆத்திரமடைந்து தாக்கியதில் இளஞ்செழியனுக்கு கையில் அடிபட்டது.
தகவலறிந்து பெரம்பலூர் ஊரக காவல் நிலைய போலீஸார், சென்று இளஞ்செழியன் மற்றும் பிச்சமுத்து ஆகிய இருவரை யும், கார்களுடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இதில், இளஞ்செழியனின் கார் ஆவணங்கள் சரியாக இருப்பதையும், பிச்சமுத்துவின் காரில் இருந்த பதிவெண் போலியாக எழுதப்பட்டது என்பதும் தெரியவந்தது. ஆனால், அந்த காரை வேறு ஒருவரிடம் வாங்கியதாக பிச்சமுத்து தெரிவித்ததையடுத்து, போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.