புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், வீடு திரும்பியதும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆலங்குடி மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மகன் மகேந்திரன்(40) உள்ளிட்ட கிராமத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, விசாரணைக்காக மகேந்திரனை போலீஸார் கறம்பக்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பகல் முழுவதும் காத்திருக் வைத்து, இரவில் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய மகேந்திரன், பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
முன்னதாக, போலீஸார் தன்னை அழைத்துச் சென்று அவமரியாதை செய்ததாக தனது சகோதரியிடம் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து போலீஸார் சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மகேந்திரனின் உறவினர்கள், போராட்டம் நடத்தப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, கறம்பக்குடி, பட்டத்திக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் 100-க்கும் அதிகமான போலீஸார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.