திருச்சி: அபராதம் செலுத்தாதால் பறிமுதல் செய்யப்பட்டு, திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்த பேட்டரி, டீசல் திருடு போனதால் லாரி உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராசு. இவர், மார்ச் 5ம் தேதி தனக்குச் சொந்தமான லாரியில் விறகு ஏற்றிக் கொண்டு திருச்சி வந்தார். அப்போது, திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அவரது லாரியை சோதனை நடத்தி, அதிக பாரம் ஏற்றி வந்ததற்காக ரூ.25 ஆயிரம், சாலை வரி கட்டாததால் ரூ.36,500 அபராதம் விதித்தனர். ஆனால், சிங்கராசிடம் பணம் இல்லாததால், லாரியை அலுவலர்கள் பறிமுதல் செய்து, பிராட்டியூரில் உள்ள திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் கொண்டு சென்று நிறுத்தினர்.
இந்நிலையில், நகையை அடகு வைத்து அபராதத் தொகையை சிங்கராசு செலுத்திவிட்டு, நேற்று லாரியை மீட்டு வருவதற்காகச் சென்றார். ஆனால், அப்போது லாரி டீசல் டேங்க்கில் சொட்டு டீசல் இல்லாததுடன், லாரியில் இருந்த பேட்டரியும் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டபோது, "லாரியை பறிமுதல் செய்தபோது, அலுவலகத்தில் நிறுத்தப்படும் வாகனத்தில் உள்ள பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என ஏற்கெனவே உங்களிடம் எழுதி வாங்கியுள்ளோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, வாடகைக்கு பேட்டரி எடுத்து, கேனில் டீசல் வாங்கி வந்து தனது லாரியை சிங்கராசு எடுத்துச் சென்றார்.
இது குறித்து திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜனிடம் கேட்டபோது அவர் கூறியது: பறிமுதல் செய்யப்படும் வாகனங்களு க்கு அந்தந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள்தான் பொறுப்பு என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் இங்கு நிறுத்தப்படுகின்றன. ஆனால், அவர்கள் யாரும் வாகனங்களுடன் இருப்பதில்லை.
10, 15 நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் வாகனங்களை சிலர் நோட்டமிட்டு, பின்பக்க சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்து பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுவிடுகின்றனர். இங்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இரவுக் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து மேலும் ஒருவரை இரவுக் காவல் பணிக்கு நியமித்துள்ளோம் என்றார்.