சிவகங்கையில் வங்கி அதிகாரி போல் பேசி முதியவரிடம் ரூ.87 லட்சம் மோசடி


சிவகங்கை: தனியார் வங்கி அதிகாரி போல் பேசி தேவகோட்டை முதியவரிடம் ரூ.87.25 லட்சம் மோசடி செய்தது குறித்து சிவகங்கை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்தவர் சந்திரன் (88). இவரது செல்போனுக்கு வாட்ஸ் ஆப் அழைப்பு மூலம் கடந்த ஜனவரி மாதம் ஒருவர் தொடர்பு கொண்டார். மேலும் அவர், தான் தனியார் வங்கி மேலாளராக இருப்பதாகவும், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய சந்திரன், 8 தவணைகளில் மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.87,25,986-ஐ அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் அந்த மர்ம நபரை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாந்ததை அறிந்த சந்திரன், இது குறித்து சிவகங்கை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். தொடர்ந்து சார்பு ஆய்வாளர் முருகானந்தம் வழக்குப் பதிந்து பணத்தை மோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்.

x