புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து இன்று 2 மணி நேரம் நடந்த சோதனையில் அது புரளி என தெரிந்தது.
புதுச்சேரி வழுதாவூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. வழக்கமாக காலையில் ஊழியர்கள் வரத்தொடங்கினர். இந்த நிலையில் இன்று காலை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலக அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து தன்வந்திரி காவல் நிலையம் உள்ளிட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் விரைந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை இட்டனர். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஒவ்வொரு அறையாக சோதனை நடந்தது. கலெக்டர் அறை தொடங்கி அனைத்து தளங்களிலும் உள்ள அனைத்து அறைகளும் சோதனையிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு, ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை நடைபெற்றது. 2 மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
தமிழகத்தில் சவுக்கு சங்கர் வீட்டில் சமீபத்தில் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சூறையாடிய விவகாரத்தில் முறையான நடவடிக்கை இல்லாததை கண்டித்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.