பெரம்பலூர்: வெண்பாவூரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி மாணவிகள் 30 பேர், அருகேயுள்ள வடகரை கிராமத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 31ம் தேதி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விடுதியில் மாணவிகள் ஓடிப்பிடித்து விளையாடி உள்ளனர். இது, செல்போனில் பேசிக் கொண்டிருந்த விடுதி சமையலர் செல்விக்கு (40) இடையூறாக இருப்பதாகக் கூறி மாணவிகள் மீது கற்களை எறிந்து அடித்துள்ளார். இதில் ஒரு மாணவியின் முதுகு தண்டுவடத்தில் கல் விழுந்து அவர் வலி தாங்காமல் துடித்துள்ளார்.
இது குறித்து சமையலர் செல்வியிடம் சக மாணவிகள் கேட்டுள்ளனர். ஆனால், அவர்களை சமையலர் செல்வி தாக்கியதுடன், அவர்களது காலில் கடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த விடுதிக் காப்பாளர் சங்கீதா, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, சமையலர் செல்வி தாக்கியதில் காயமடைந்த 2 மாணவிகளை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் நேற்று விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், ஆட்சியரின் உத்தரவின் பேரில் சமையலர் செல்வி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், மாணவிகளைத் தாக்கியது தொடர்பாக கை.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.