ஆவடியில்  தாய், மகளை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை


திருவள்ளூர்: ஆவடியில் தாய், மகள் என இருவரையும் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி- எச்.வி.எப். சாலை பகுதியில் உள்ள நரிகுறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவி ரோஜா (25), மகள் சுஜாதா (3), மகன் பார்த்திபன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி ரோஜாவும், சுஜாதாவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது, ரோஜா வீட்டுக்கு அருகில் உள்ள குமார் வீட்டுக்கு வந்த, அவரின் உறவினரான, வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்த வீரா என்கிற வீரகுமார் (25), ரோஜாவிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அதற்கு ரோஜா எதிர்ப்பு தெரிவித்ததால், கோபமடைந்த வீரகுமார், ரோஜாவையும் அவரது மகளான 3 வயது குழந்தை சுஜாதாவையும் அம்மி கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

இந்த இரட்டை கொலைகள் குறித்து, ரோஜாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வீரகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா வாதிட்டார். முடிவுக்கு வந்த விசாரணையில், வீரகுமார் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரேவதி புதன்கிழமை அளித்தார்.

அதில், வீரகுமாருக்கு, ரோஜா மற்றும் அவரது மகளை கொன்ற குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், ரோஜாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கிய குற்றத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த தண்டனைகளை வீரகுமார் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

x