விருதுநகர்: சாத்தூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மஞ்சள்ஓடைப்பட்டியிலிருந்து 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு வந்த அழைப்பில், அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பள்ளியில் கடந்த 27ம் தேதி விருதுநகர் மாவட்ட நன்னடத்தை அலுவலர், சைல்டு லைன் நிர்வாகி மற்றும் மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்று மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதோடு, பாலியல் ரீதியான துன்புறுத்துதல் ஏதேனும் இருப்பின் அதுபற்றி தெரிவிக்கலாம் என்றும் கூறினர். அப்போது, அப்பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமிகள் இருவர், பள்ளித் தலைமை ஆசிரியர் சக்கரை தாஸ் தங்களிடம் தவறாக நடந்ததாகவும், பாலியல் சீண்டல் செய்ததாகவும் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் பள்ளித் தலைமை ஆசிரியர் சக்கரை தாஸ் மீது போலீஸார் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.