கடன் தொல்லையால் மன்னார்குடி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: பெண் உட்பட 3 பேர் கைது


திருவாரூர்: மன்னார்குடி சர்ச் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன்(40). இவர், தஞ்சாவூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் 2021 ம் ஆண்டு ரூ.15 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில், பணத்தை திருப்பித் தருமாறு தொடர்ந்து பாலகிருஷ்ணன் வலியுறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, ஓராண்டுக்கு முன்பு திருமுருகன் ரூ.11 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதம் உள்ள ரூ.4 லட்சத்தை தர வேண்டும் என திரு முருகனை, பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தையான ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஜம்புநாதன், மகள் ரோகினி மற்றும் நெடுவாக் கோட்டையைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய 4 பேரும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமுருகன் தனது இறப்புக்கு பாலகிருஷ்ணன், ரோகிணி, தர்மராஜ், ஜம்புநாதன் ஆகிய 4 பேர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணன், அவரது மகள் ரோகினி மற்றும் தர்மராஜ் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஜம்புநாதனை தேடி வருகின்றனர்.

x