ஈரோடு: பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஈரோடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நாகர்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபா (48). கோபி அருகே வண்ணாந்துறைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு குடும்ப செலவுக்காக, ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரான முத்து ராமசாமி என்பவரிடம் வீட்டை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றார். இதற்கான அசல் மற்றும் வட்டி என மொத்த பணத்தையும் பிரபா செலுத்தி உள்ளார்.
ஆனால், தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி, வீட்டை பிரபா பெயருக்கு எழுதி தராமல் வீட்டை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி, முத்து ராமசாமி, அவரது ஆதரவாளர்களுடன் பிரபா வீட்டுக்குச் சென்று அவரை தரக்குறைவாக திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்து, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து கோபி காவல் நிலையத்தில் பிரபா புகார் அளித்தார். இதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸார், தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீது பள்ளிக்கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆணைய உறுப்பினர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் எதிரொலியாக, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர் முத்து ராமசாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த புகார் தொடர்பாக ஆணையத்தின் விசாரணை தொடர்கிறது.