சென்னை: திருவல்லிக்கேணி பிலால் உணவகத்தில் உணவருந்திய 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஹோட்டல் பிலால் பிரியாணி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திலும் ரம்ஜானுக்கு முதல் நாள் இங்கு பீப் சாப்பிட்ட 20 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தண்டையார்பேட்டை மருத்துவ மனையிலும், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணாசாலையில் மவுண்ட் ரோடு பிலால் என்ற பிரபலமான உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த 30 ஆம் தேதி சகோதரிகளான 2 கல்லூரி மாணவிகள் குடும்பத்தினருடன் வந்து உணவருந்தி உள்ளனர். இவர்கள் இருவரும் மட்டன் குழம்பு சாப்பிட்டதாகவும் அதற்கு பிறகு இவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பத்தினர் புகார் அளித்து வருகின்றனர். கெட்டுப்போன உணவுகள் விற்கப்பட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி பிலால் உணவகத்தில் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறையினர் சென்றன. பூட்டப்பட்டிருந்த அக்கடையின் உரிமையாளரை தொடர்புகொள்ள முடியாததால், அந்த உணவகத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.