அனாகபுத்தூர்: பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் பழகிய காதலியை கொலை செய்தவர் சரண் அடைந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கவுரி அவென்யூ 2-வது தெருவை சேர்ந்தவர் ஞான சித்தன் (40). இவர், லாரி ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகாத நிலையில், தனியாக வசித்து வந்தார். அனகாபுத்தூர், அருள் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த பாக்கிய லட்சுமி (33) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பாக்கிய லட்சுமி ஏற்கெனவே கணவரை விவாகரத்து செய்து விட்டு, தனது இரண்டு பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஞானசித்தனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. ஒரு கட்டத்தில் ஞானசித்தன், பாக்கிய லட்சுமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது தான், பாக்கிய லட்சுமிக்கு ஞானசித்தன் தவிர, மற்றொரு ஆண் நபருடனும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஞான சித்தன், பாக்கிய லட்சுமியிடம் கேள்வி கேட்டார். அதற்கு பாக்கிய லட்சுமியோ, ‘நான் யாரிடம் தொடர்பில் இருந்தால் உனக்கு என்ன?’ என்று எடுத்தெறிந்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஞான சித்தன், அருகில் கடந்த பெரிய கல்லை எடுத்து பாக்கிய லட்சுமியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், நிலைகுலைந்த பாக்கிய லட்சுமி, அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஞானசித்தன், பின்னர் சங்கர் நகர் காவல் நிலையம் சென்று, நடந்த உண்மையைக் கூறி சரண் அடைந்தார். இதனைக் கேட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அங்கு இறந்து கிடந்த பாக்கிய லட்சுமியின் உடலை மீட்டு, அதனை பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.